Friday, April 8, 2016

ஆர்யபட்டா

ர்யபட்டா...!  1975-ம் ஆண்டு ஏப்ரல் 19-ந் தேதி இந்தியா வானில் வெற்றிகரமாக பறக்கவிட்ட செயற்கைக்கோளின் பெயர்.

செயற்கைக்கோளுக்கு இந்திய விஞ்ஞானிகள் இந்த பெயரை தேடிஎடுத்து சூட்டியபோதுதான் பலரும், 'ஆர்யபட்டா என்றால் என்ன?, அல்லது யாருடைய பெயருமா?' என்று வியப்புடன் வினா எழுப்பினார்கள்.

1,550 ஆண்டுகளுக்கு முன்பே கணிதத்துறையிலும், குறிப்பாக வானவியல் துறையிலும் அளப்பரிய சாதனைகளைச் செய்தவர், இந்தியாவில் பிறந்த ஆர்யபட்டா என்பது, அதிகம் பேருக்கு தெரியாமல் இருந்ததுதான் நமது துரதிருஷ்டம்.

ஆனால், ஆர்யபட்டா காலத்துக்கும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியாவில் பல கணிதமேதைகள் இருந்தார்கள் என்பதுதான் நமது வரலாற்றின் தனிச் சிறப்பு. அந்த நீண்ட வரலாறு பற்றிய சிறு குறிப்பு:-

இந்தியாவின் கணித மேதைகளில் முன்னோடி என்று
போற்றப்படுபவர் களில் 'பவுத்தயானா' என்பவரும் ஒருவர். இவரது காலம் கி.மு.800 ஆகும்.

கி.மு. 300-ம் ஆண்டைச் சேர்ந்த 'காத்யாயனா', கி.மு. 200-ம் ஆண்டில் வாழ்ந்த 'பாணினி', கி.மு. 100-ம் ஆண்டைச் சேர்ந்த 'பிங்கலா' ஆகியோரும் கணிதத் துறையில் தனிப்பெரும் சாதனைகளைச் செய்தார்கள். என்றாலும், அவர்களுக்கு பின் வந்த ஆர்யபட்டா தான் 'வரலாற்றில் நிலைத்து நிற்கக் கூடிய பல கண்டுபிடிப்புகளின் காரணகர்த்தா' என்பதால் அழியாப் புகழ் பெற்றார்.

ஆர்யபட்டா, எங்கு பிறந்தார் என்பது சரியாக தெரியவில்லை என்றாலும், இன்றைய கேரளாவின் பகுதியிலோ, பீகார் மாநிலத்திலோ அவர் பிறந்து இருக்கலாம் என்று யூகிக்கப்படுகிறது. இவரது காலம் கி.பி.476 - கி.பி.550 ஆகும்.

இவர் தனது 23-வது வயதில் 'ஆர்யபட்டியா' என்ற நூலை எழுதினார். 108 பாடல்கள் அடங்கிய அந்த நூலுக்கு அவர், பெயர் ஏதும் வைக்கவில்லை. 'ஆர்யபட்டா' ஆக்கியது என்பதால் அது இப்போது 'ஆர்யபட்டியா' என்று அழைக்கப்படுகிறது.

இது கணிதத் துறைக்கும், வானியல் துறைக்கும் கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷமாகப் போற்றப்படுகிறது.

ஆர்யபட்டா காலத்துக்கு முன்வரை அனைவரும் பூமி நிலையாக இருக்கிறது என்றும், வானம்தான் சுற்றி வருகிறது என்றும் நினைத்து இருந்தார்கள்.
வானத்தில் உள்ள காட்சிகள் நகர்ந்து கொண்டே இருப்பது போல் தோன்றியதால், அவர்கள் இந்த முடிவுக்கு வந்து இருந்தார்கள். 

ஆர்யபட்டா, பூமியும், மற்ற கிரகங்களும் சூரியனைச் சுற்றிவருகின்றன என்பதை  அழகான எளிய உதாரணத்துடன் தனது நூலில் குறிப்பிட்டு இருக்கிறார்.

''நாம் படகில் செல்லும்போது அருகில் உள்ள பொருட்கள் எதிர் திசையில் நகருவதுபோல உணருகிறோம். ஆனால் உண்மையில் அந்த பொருட்கள் அப்படியேதான் இருக்கின்றன. நமது படகு நகருவதால்தான் அருகில் உள்ளவை எதிர் திசையில் செல்வதுபோல தோற்றம் அளிக்கிறது. அதுபோல நமது பூமி சுற்றிவரும்போது வானமும், அதில் உள்ள நட்சத்திரக் கூட்டங்களும் எதிர் திசையில் நகருவது போல தோன்றுகின்றன' என்கிறார், ஆர்யபட்டா.

மேலும் பூமி தன்னைத்தானே ஒருமுறை சுற்ற 23 மணி 56 நிமிடம் 4.1 வினாடி ஆகிறது என்று ஆர்யபட்டா கூறி இருக்கிறார். தற்போதைய விஞ்ஞானம், இந்த கால அளவை, 23 மணி 56 நிமிடம் 4.091 என்கிறது.

அதுபோல, பூமி சூரியனை ஒருமுறை சுற்றிவர 365.25858 நாட்கள் ஆகிறது என்று ஆர்யபட்டா கூறி இருக்கிறார். நவீன விஞ்ஞானம், இதனை 365.25636 நாட்கள் என்கிறது.

சந்திரன் மற்றும் சூரிய கிரகணங்கள் ஏற்படுவது ஏன் என்பதையும் ஆர்யபட்டா விஞ்ஞான பூர்வமாக கூறி இருக்கிறார்.

கணிதம் மற்றும் வானவியலில் 'பை' எனப்படும் வித்தியாசமான எண் மிக முக்கியம் வகிக்கிறது.

ஒரு வட்டத்தின் சுற்றுவட்ட அளவை, அதன் குறுக்களவால் வகுத்தால் கிடைக்கக்கூடிய எண் தான் 'பை' எனப்படுகிறது.

இந்த எண் பற்றி தனது நூலான  ஆர்யபட்டியாவில் கணிதபாடம் என்ற தலைப்பில் கீழ்க்கண்டவாறு கூறுகிறார்.

''100 என்ற எண்ணுடன் நான்கை கூட்டுங்கள். அந்த தொகையை 8 ஆல் பெருக்குங்கள். அதனுடன் 62,000-ஐ கூட்டுங்கள். இந்த தொகையை 20,000 ஆல் வகுக்க வேண்டும். அப்போது கிடைக்கும் விடை 3.1416 என்பதுதான் அந்த வித்தியாசமான எண்'' என்று ஆர்யபட்டா கூறி இருக்கிறார்.

கடந்த 1761-ம் ஆண்டில் ஐரோப்பாவில் லாம்பெர்ட் என்பவர், இந்த 'பை' என்ற எண்ணின் அளவு 3.1416 என்பதை ஆராய்ச்சி மூலம் நிரூபித்தார். ஆனால் அதற்கு 1,300 ஆண்டுகளுக்கு முன்பே நமது ஆர்யபட்டா, இந்த கண்டுபிடிப்பை நிகழ்த்தி சாதனைபடைத்து இருக்கிறார்.

'பை' என்ற இந்த எண் மூலம், பூமியின் சுற்றளவு 24,835 மைல் என்று ஆர்யபட்டா கண்டறிந்து கூறி இருக்கிறார். 

இந்த அளவு, தற்போதைய நவீன கண்டுபிடிப்பில் இருந்து 70 மைல் மட்டுமே வித்தியாசப்படுகிறது என்பது வியப்பளிக்கிறது அல்லவா?

இப்படிப்பட்ட ஆர்யபட்டாவின் திறமைகளை இந்தியர்கள் முழுமையாக தெரிந்துகொள்வதற்கு முன், வெளிநாட்டினர் அவரது சாதனைகளைக் கண்டு வியந்து போற்றி இருக்கிறார்கள். ஆர்யபட்டாவின் நூல் 13-வது நூற்றாண்டில் லத்தீன் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டதைத் தொடர்ந்து பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

இவற்றில் குறிப்பிடத்தக்கது, அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழக பேராசிரியர் வால்ட்டர் யுகென் கிளார்க் என்பவர் 1930-ம் ஆண்டில் வெளியிட்ட நூல் ஆகும்.

 இதில் ஆர்யபட்டாவின் 108 செய்யுள்களும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இதன் மூலம் ஆர்யபட்டா புகழ் உலகின் பல பகுதிகளிலும் பரவியது.

ஆர்யபட்டா போலவே, கணிதம் மற்றும் வானியல் துறையில் முத்திரை பதித்தவர்களில் மேலும் ஒருவர் பாஸ்கராச்சார்யா.

1,114-1,185-ம் ஆண்டுகளில் வாழ்ந்த பாஸ்கராச்சார்யா, கர்நாடக மாநிலத்தில் பிறந்தவர் என்று கூறப்படுகிறது. இவர் ஏறத்தாழ 500 செய்யுள்களில் தனது நூலை ஆக்கி இருக்கிறார். சித்தாந்த சிரோமணி என்ற அந்த நூல், கூட்டல் கழித்தல் ஆகிய எண்கணிதம் மற்றும் அல்ஜீப்ரா, கிரகங்கள், பிரபஞ்சம் ஆகிய 4 பிரிவுகளைக் கொண்டது.

இவரது கண்டுபிடிப்புகளில் முக்கியமானது, புவிஈர்ப்பு சக்தி ஆகும். சூர்யசித்தாந்தம் என்ற நூலில் அவர் இதுபற்றி குறிப்பிட்டு இருக்கிறார்.

எந்த ஒரு பொருளும் பூமியில் விழுவதற்கு காரணம், பூமியின் ஈர்ப்பு சக்திதான். அதேபோல மற்ற கிரகங்களுக்கும் ஈர்ப்பு சக்தி இருப்பதால் தான், வானில் எல்லா கிரகங்களும் தங்களது இடத்தில் அப்படியே இருக்கின்றன என்று அவர் கூறி இருக்கிறார்.

பூமியின் ஈர்ப்பு சக்தியை 1687-ம் ஆண்டு ஐசக் நியூட்டன் கண்டுபிடித்தார் என்று இப்போது உலகம் போற்றிக்கொண்டு இருக்கிறது. 

ஆனால், அவருக்கு 1,200 ஆண்டுகளுக்கு முன்பே புவி ஈர்ப்பு சக்தியை கண்டறிந்தது நமது கணித மேதை பாஸ்கராச்சார்யா என்பது பெருமைக்குரியது அல்லவா?


No comments:

Post a Comment

தங்கள் மேலான கருத்துக்களை இங்கே பதிவிடவும்