Tuesday, March 22, 2016

மைசூர் ஈர்க்கும் இடங்கள்

மைசூர் அரண்மனை:
உண்மையில் மைசூர் அரண்மனை என்று இந்த பிரதான அரண்மனை தான் குறிப்பிடப்படுகிறது. அந்த அளவுக்கு பிரமாண்டமும் வரலாற்று பின்னணியும் கொண்டது இந்த அரண்மனை. இந்தோ சராசனிக், திராவிடம், ரோமன் மற்றும் ஓரியண்டல் போன்ற எல்லா கட்டிடக்கலை அம்சங்களும் கலந்து இந்த அரண்மனை உருவாக்கப்பட்டுள்ளது.

மூன்று அடுக்குகளை கொன்டு சாம்பல் நிற சலவைக் கற்களால் உருவாக்கப்பட்டுள்ள இந்த அரண்மனையில் மூன்று இளம் சிவப்பு நிற குமிழ் கோபுரங்கள் காணப்படுகின்றன. அரண்மனையை ஒட்டி 44.2 மீட்டர் உயரத்துக்கு ஐந்து அடுக்குகளை கொன்ட தூண் கோபுரம் ஒன்றும் காணப்படுகிறது. இதன் மேற்பகுதியில் உள்ள அலங்கார கலசங்கள் தங்கத்தால் உருவாக்கப்பட்டுள்ளன.சுற்றுலா பயணிகள் இந்த அரண்மனையில் கோம்பே தொட்டி அல்லது பொம்மை விதானம் என்ற வாசல் வழியாக நுழையலாம். இந்த விதானத்தில் 19 ம் நூற்றாண்டு மற்றும் 20 ஆம் நூற்றாண்டை சேர்ந்த
பொம்மைகள் காணப்படுகின்றன.
அது தவிர இங்கு மரத்தால் ஆன ஒரு யானை சிலை 81 கிலோ தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டு காணப்படுகிறது. கோம்பே தொட்டி வாயில் முன்புறத்தில் 7 பீரங்கிகளை பார்க்கலாம். தசரா திருவிழா துவங்கும்போதும் முடியும் போதும் இந்த பீரங்கிகள் முழங்கி விழாவினை கௌரவப்படுத்துகின்றன. தசரா திருவிழாவின் போது இந்த அரண்மனையில் உள்ள தங்க அரியாசனம் பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்படுகிறது.சுற்றுலாப்பயணிகள் இந்த அரண்மனையில் அரச உடைகள் வைக்கப்பட்டுள்ள அறை, அரச ஆபரணங்கள் வைக்கப்பட்டுள்ள அறை மற்றும் ஓவியக்காட்சி அறை போன்றவற்றை எந்த வித தடங்கலும் இன்றி மிக அருகில் பார்த்து மகிழலாம்.
இந்த அரண்மனையின் சுவர்களை பிரபல இந்திய ஓவியர்களான சித்தலிங்க சுவாமி, ராஜா ரவி வர்மா மற்றும் கே. வெங்கடப்பா போன்றோரின் ஓவியங்கள் அலங்கரிக்கின்றன. பதினான்காம் நூற்றாண்டில் கட்டப்பட்டு இருபதாம் நூற்றாண்டு வரை பல புதிய அமைப்புகள் சேர்க்கப்பட்டுள்ள இந்த அரண்மனையின் உள்ளே  வெவ்வேறு கட்டிடக்கலை மாதிரியை பின்பற்றி கட்டப்பட்டுள்ள14 கோயில்கள் காணப்படுகின்றன.
பிருந்தாவன் கார்டன்
மைசூரிலிருந்து 20 கி.மீ தொலைவில் அமைந்துள்ள பிருந்தாவன் கார்டன் என்ற பிரம்மாண்டமான பூங்கா தோட்டம் மைசூர் வருகை தரும் பயணிகள் அனைவரும் தவறாமல் பார்க்க வேண்டிய அற்புதமாகும்.
காவிரி ஆற்றில் கட்டப்பட்டுள்ள கிருஷ்ண ராஜ சாகர் என்ற அணைக்கு கீழே இந்த பூங்கா தோட்டம் அமைக்கப் பட்டுள்ளது. மஹாராஜா நான்காம் கிருஷ்ண ராஜ உடையார் பெயரில் 1924 லிருந்து  1932க்குள்  கட்டப்பட்டுள்ள இந்த அணை புகழ் பெற்ற பொறியியல் வல்லுநர் சர். எம். விஸ்வேஸ்வரய்யா’வால் வடிவமைக்கப்பட்டது என்பது ஒரு சிறப்பம்சம்.
காஷ்மீரில் உள்ள பிரசித்தி பெற்ற பூங்கா தோட்டமான ஷாலிமார் கார்டனை பின்பற்றி இந்த பிருந்தாவன் கார்டன்ஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது.  அறுபது ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து காணப்படும் இந்த பூங்காவில் அழகான மலர் படுக்கைகள்,  பசுமையான புல் வெளிகள், பலவகையான மரங்கள், பலவடிவங்களில் அமைக்கப்பட்ட நீர் தடாகங்கள், விதம் விதமான நீர் ஊற்றுகள் என்று பல்வேறு எழில் அம்சங்கள் நிறைந்து வழிகின்றன.
இந்த பூங்காவின் மையத்தின் அமைந்துள்ள சிறு குளத்தில் காவேரி தெய்வத்தின் சிலை அமைந்துள்ளது. இந்த குளத்தில் பயணிகள் படகு பயணம் செல்ல வசதி செய்யப்பட்டுள்ளது.
பூங்காவின் வடக்கு பகுதியில் இசை நீருற்று ஒன்றும் அமைக்கபட்டுள்ளது. இங்கு இசைக்கேற்ப நீரூற்று நடனமாடும் காட்சியை சுற்றுலா பயணிகள் கண்டு மகிழலாம்.
இந்த தோட்டத்தில் விசேஷமான ஒளி விளக்கு அலங்காரங்கள் செய்யப்பட்டிருப்பதால் இரவில் இவை இந்த பூங்கா முழுவதையும் வண்ண மயமாக மாற்றுகின்றன. இந்த பல வண்ண மின் விளக்குகள் வார நாட்களில் இரவு 7 மணியிலிருந்து 8 மணி வரையும், சனி, ஞாயிறுகளில் 7 மணி முதல் 9 மணி வரையும் எரிய வைக்கப்படுகின்றன.
பிருந்தாவன் கார்டன்ஸ் பூங்கா தோட்டமானது கர்நாடக மாநில அரசின் காவேரி நீர் பாசனத் துறையின் நேரடி பராமரிப்பில் உள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.
சாமுண்டி மலைகள்
சாமுண்டி மலைகள் கடல் மட்டத்திலிருந்து சுமார் 1065 அடிகள் உயரத்தில் உள்ளன. மைசூர் நகருக்கு வருகை தரும் பயணிகள் அவசியம் பார்க்க வேண்டிய இடம் இது. இந்த சாமுண்டி மலையின் உச்சியில் பார்வதி தேவியின் அவதாரமான சாமூண்டீஸ்வரி அம்மனின் கோயில் அமைந்துள்ளது.மைசூர் புகைப்படங்கள் - சாமுண்டேஸ்வரி கோயில் ராஜகோபுரம் - சாமுண்டி மலைகள்
இந்த தெய்வம் உடையார் ராஜ வம்சத்தினரின் குல தெய்வமாகும். 11 ஆம் நூற்றான்டில் கட்டப்பட்ட இந்த கோயில் 1827 ஆம் ஆண்டு மைசூர் மன்னர்களால் புதுப்பிக்க பட்டதாக வரலாறு கூறுகிறது.
கோயில் எதிரில் அசுர வம்ச மன்னனான மகிஷாசுரனின் பிரம்மாண்ட சிலை அமைந்துள்ளது.சாமுண்டி மலையில் மற்றொரு குறிப்பிடத் தக்க அம்சம் இங்கு அமைந்துள்ள நந்தி சிலை ஆகும். 5 மீட்டர் உயரம் கொண்ட இந்த பிரம்மாண்ட சிலை ஒரே ஒரு கருப்பு சலவைக்கல்லில் செதுக்கப்பட்டுள்ளது இதன் விசேஷமாகும்.
இந்த மலையில் சாமுண்டீஸ்வரி அம்மனுக்கும் ஹனுமானுக்குமான ஒரு சிறிய கோயில் அமைந்துள்ளது. இது காலஇ 7.30 மணியிலிருந்து மதியம் 2 மணி வரையிலும், அதன் பின்னர் மதியம் 3.30 மணியிலிருந்து மாலை 6 மணி வரையிலும் பக்தர்களுக்கு திறந்து விடப்படுகிறது.
சாமுண்டி மலை உச்சியிலிருந்து கீழே  பார்த்தால் சுற்றுலாப்பயணிகளுக்குமைசூர் நகரம் முழுவதும் காட்சிக்கு தெரியும் என்பது சாமுண்டி மலையின் மற்றொரு சிறப்பம்சம்.

ரீஜனல் மியூசியம் ஆப் நேச்சுரல் ஹிஸ்டரி

மைசூருக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் கண்டிப்பாக இந்த பிராந்திய அருங்காட்சியகத்தை பார்க்கும் படியாக அறிவுறுத்தப் படுகிறார்கள். சாமுண்டி மலையடிவாரத்தில் கரன் ஜி ஏரிக்கரையின் மீது இந்த மியூசியம் அமைந்துள்ளது.மைசூர் புகைப்படங்கள் - ரீஜனல் மியூசியம் ஆப் நேச்சுரல் ஹிஸ்டரி - விலங்கு இனங்கள்
1995ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த அருங்காட்சியகம் இயற்கை அன்னைக்கென்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகம் தென்னிந்தியாவிற்கு சொந்தமான அற்புத மலர்கள், தாவரங்கள் மற்றும் அவற்றின் மகிமைகள், விலங்குகள் மற்றும் புவியியல் தாது பொக்கிஷங்கள் போன்றவை குறித்த தகவல்களை வழங்குகிறது என்பது குறிப்பிடத் தக்கது.இங்கு வரும் சுற்றுலா பயணிகள் இயற்கை சுற்றுச் சூழல், பிராணிகள் மற்றும் தாவரங்களிடையே உள்ள சமச்சீர் உறவு போன்ற இயற்கை சார்ந்த அறிவியல் உண்மைகளை மிக எளிமையாக தெரிந்து கொள்ளலாம்.
மேலும் இயற்கை சூழலியல், உயிரியல் பன்முகத்தன்மை, உயிரியல் பரிணாம வளர்ச்சி, இயற்கை பாதுகாப்பு போன்ற இயற்கை அறிவியல் சார்ந்த கருத்துகள் பற்றிய அறிவை இங்கு பெறலாம். கருத்து விளக்கத்துக்கு உதவும் மாதிரி படைப்புகள், கருவிகள், ஒலி-ஒளிபடப் படைப்புகள் போன்ற பல அம்சங்கள் இந்த மியூசியத்தில் இடம் பெற்றுள்ளன.
இந்த மியூசியத்தை பார்வையிடுவதற்கு பொது மக்கள் எந்த விதமான கட்டணமும் செலுத்த தேவையில்லை என்பது குறிப்பிடத் தக்கது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த மியூசியம் திறந்துள்ளது.

கரஞ்சி லேக்

மைசூர் நகருக்கு நீங்கள் சுற்றுலா வரும்போது கரஞ்சி லேக்கை கண்டிப்பாக தவற விட்டுவிடக்கூடாது. இந்த ஏரியை சுற்றி அமையப்பெற்றுள்ள இயற்கை பூங்காவில் பட்டாம்பூச்சி பூங்காவும், இந்தியாவின் மிகப்பெரிய பறவைகள் பண்ணை ஒன்றும் அமைந்துள்ளன.
மைசூர் புகைப்படங்கள் - காரஞ்சி புகைப்படங்கள் 
கரஞ்சி லேக் 90 ஏக்ரா பரப்பளவில் அமைந்துள்ள மைசூர் மிருகக்காட்சி சாலையின் கட்டுப்பாட்டில் உள்ளது. அதோடு கரஞ்சி லேக் 55 ஏக்ரா அளவிற்கு பரந்து கிடப்பதால் மிருகக்காட்சி சாலையின் முக்கால்வாசி இடம் ஏரி நீரால் சூழப்பட்டுள்ளது. இங்கு வரும் பயணிகள் ஏரியில் படகுப் பயணம் செய்து மகிழலாம்.
பறவைகள் பண்ணை
இந்தியாவின் மிகப்பெரிய பறவைகள் பண்ணையாக கரஞ்சி லேக்கில் உள்ள பண்ணை அறியப்படுகிறது. 60 மீட்டர் நீளமும், 40 மீட்டர் அகலமும் கொண்ட இந்த பறவைகள் பண்ணை 3.8 மில்லியன் ரூபாய் செலவில் நிறுவப்பட்டது. இங்கு இருவாய்க்குருவி, கருப்பு அன்னப் பறவை, வான்கோழி, மயில் போன்ற பறவைகளை கண்டு ரசிக்கலாம்.
பட்டாம்பூச்சி பூங்கா
கரஞ்சி லேக்கில் அமைந்துள்ள பட்டாம்பூச்சி பூங்கா அமைதியாக நேரத்தை கழிக்க மிகவும் ஏற்ற இடம். இங்கு பரந்து விரிந்து கிடக்கும் மலர் பூங்காவில் 45 வகையான பட்டாம்பூச்சி இனங்களை காணலாம்.
அதோடு தேன் சுரக்கும் பூக்களை கொண்ட செடிகளை நட்டு மேலும் சில பட்டாம்பூச்சிகளை ஈர்க்கும் நோக்கத்துடன் நிறைய செடிகள் பூங்காவில் நடப்பட்டு வருகின்றன.
புலம்பெயர் பறவைகள்
கரஞ்சி லேக்கில் செங்கால் நாரை, கூழைக்கடா, ஐபிஸ், உண்ணிக் கொக்கு, சாம்பல் நாரை, உள்ளான், கரிச்சான் குருவி உள்ளிட்ட புலம்பெயர் பறவைகளை பார்க்க முடியும். இந்த ஏரி காலை 8.30 மணியிலிருந்து, 5.30 மணிவரை திறந்திருக்கும். அதோடு மைசூரின் மற்ற பகுதிகளிலிருந்து கரஞ்சி லேக்கை மாநகராட்சி பேருந்து மூலமாக சுலபமாக அடைந்து விட முடியும்.

ஜகன்மோகன் அரண்மனை

மைசூர் வரும் சுற்றுலா பயணிகள் இந்த நகரின் பழமை வாய்ந்த கட்டிடங்களின் ஒன்றான ஜகன்மோகன் அரண்மனையை பார்க்காமல் திரும்புவதில்லை. மைசூரை ஆண்ட மன்னர்களால் 1861ல் கட்டப்பட்ட இந்த அரண்மனையில் ராஜ குடும்பத்தினர் 1897ல் வசித்த தாக சொல்லப்படுகிறது.
மைசூர் புகைப்படங்கள் - ஜகன்மோகன் அரண்மனை - முகப்பு தோற்றம்
பழைய அரண்மனை தீ விபத்தில் அழிந்த பின்னர் புதிய அரண்மனை கட்டப்படும் வரை ராஜ குடும்பத்தினர் இந்த ஜஹன் மோகன் அரண்மனையில் வசித்துள்ளனர்.1902 ஆம் ஆண்டு இந்த அரண்மனையை உரிமையாக்கிக் கொண்ட நான்காம் கிருஷ்ண ராஜ உடையார் அப்போது நடத்திய விழாவுக்கு பிரிட்டிஷ் வைசிராய், இந்திய கவர்னர் ஜெனரல் மற்றும் லார்டு கர்சன் போன்ற முக்கிய பிரமுகர்கள் வருகை தந்திருந்தனர்.
இப்போதும் சுற்றுலாப் பயணிகள் இந்த அரண்மனையில் நான்காம் கிருஷ்ண ராஜ உடையார் திருமணத்தின் போது அமைக்கப்பட்ட திருமண விதானத்தை பார்க்கலாம். தர்பார் ஹால் என்றும் அறியப்படும் இந்த விதானத்தில்தான்  நான்காம் கிருஷ்ணராஜ உடையார் தன் பிறந்த நாள் விழாக்களை விமரிசையாக கொண்டாடுவார் என்பது குறிப்பிடத் தக்கது.
இந்த அரண்மனையின் விசாலமான அரங்குகள் இசை விழாக்கள், நாடகம் போன்ற இதர கலை நிகழ்ச்சிகள் மற்றும் மைசூர் பலகலைக் கழகத்தின் பட்டமளிப்பு விழாக்கள் போன்றவற்றிற்கு பயன்படுத்தப்பட்டன. தற்சமயம் இந்த அரங்குகள் கலை நிகழ்ச்சிகளுக்கும்  தசராவின்போது நட்த்தப்படும் மாநாடுகளுக்கும் மட்டுமே பயன்படுத்தப் படுகிறது.
இங்கு விஷ்ணுவின் தசாவதார காட்சியை சிற்ப வடிவமாய் செதுக்கப்பட்டுள்ள இரண்டு பெரிய மரக்கதவுகளும், மைசூர் மஹாராஜாக்களின் ஓவியங்களும் அவர்கள் பயன்படுத்திய கலைப்பொருட்களும் பார்க்க வேண்டிய அம்சங்களாய் உள்ளன.

லலிதா மஹால்

மைசூருக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் தவறாமல் பார்க்க வேண்டிய மற்றுமொரு தொன்மை வாய்ந்த பாரம்பரிய கட்டிடம் இந்த லலிதா மஹால் ஆகும். இது சாமுண்டி மலையின் மீது அமைந்துள்ளது.
மைசூர் புகைப்படங்கள் - லலிதா மஹால் - பசுமையான தோட்டங்களுக்கு மத்தியில்
இந்த மாளிகை 1921 ஆம் ஆண்டு மஹாராஜா நான்காம் கிருஷ்ணராஜ உடையாரால் அப்போதைய இந்திய வைஸிராய்க்காக கட்டப்பட்டதாகும். மும்பையை சேர்ந்த E.W.பிரிட்ச்லீ என்ற கட்டிடக் கலை வடிவமைப்பாளர் இந்த மாளிகையை வடிவமைத்துள்ளார்.
இந்த மாளிகை நவீன பாணியையும் ஆங்கிலேய  மெனார் பாணியையும் இத்தாலியன் பலாஸோ கட்டிட முறையையும் கலந்து கட்டப்பட்டுள்ளது. தற்சமயம் இந்த மாளிகை இந்திய அரசாங்கத்தின் சுற்றுலாத் துறையின்  மூலம் ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலாக மாற்றப்பட்டுள்ளது.
இந்த மாளிகையின் அரச பரம்பரை வரலாற்றுக்கேற்ப அதிலுள்ள இப்போதைய ஐந்து நட்சத்திர ஹோட்டல்  விருந்தினர்களை பாரம்பரிய பாணியில் உபசரித்து சேவைகளை வழங்குகிறது.இந்த மாளிகை ஒரு ஹோட்டலாக மாற்றப்பட்ட போதிலும் பழைய அரண்மனை தோற்றத்தில் எந்த மாறுதலும் செய்யப்பட வில்லை என்பது குறிப்பிடத் தக்கது. வைசிராய் அறை, நடன அரங்கம் மற்றும் விருந்து அரங்கு மற்றும் இத்தாலியன் சலவைக்கல்லால் ஆன படிக்கட்டுகள் ஆகியவை இன்றும் அப்படியே இருக்கின்றன. நடன அரங்கும், விருந்து அரங்கும்  தற்சமயம் முறையே உணவு அரங்காகவும், கூட்ட அரங்காகவும் பயன்படுத்தப் படுகின்றன.
பழைய தொன்மையான ஓவியங்கள், இருக்கைகள் போன்றவற்றை அப்படியே பயன்படுத்தியிருந்தாலும் விருந்தினர் சௌகரியங்களை கருதி நவீன சாதனங்களும் இப்போதைய ஹோட்டலில் அதன் இயல்பு கெடாமல் இடம் பெற்றுள்ளன.
விருந்தினர்களான சுற்றுலா பயணிகள் இந்த ஹோட்டலில் நடத்தப்படும் மாலை நேர திறந்த வெளி விருந்து கொண்டாட்டங்களில் கலந்து கொண்டு மகிழலாம். மாளிகையின் (ஹோட்டல்) முன்புறம் பசுமையான புல்வெளியில் நீரூற்றுகளும் கார்களை நிறுத்த நிறைய இடமும் காணப்படுகின்றன.

மைசூர் விலங்கியல் பூங்கா

மைசூருக்கு வருகை தரும் சுற்றுலாப்பயணிகள் இங்குள்ள வன விலங்கு காட்சியகத்துக்கு தவறாது செல்லுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். 1892 ம் ஆண்டு மஹாராஜா சாமராஜ உடையாரால் கட்டப்பட்ட இந்த வன விலங்கு காட்சியகம் இந்தியாவிலேயே புகழ் பெற்று விளங்கும் வன விலங்கு பூங்காவாகும்.
250 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள இந்த வன விலங்கு பூங்காவில் பல அபூர்வ வகை விலங்குகளும், பறவைகளும், ஊர்வன பிரிவு விலங்குகளும் காணப்படுகின்றன.இந்த வனவிலங்கு பூங்கா ஆரம்பத்தில் அரண்மனை விலங்குக் கூடம் என்று அழைக்கப்பட்டு இதனுள் அரச குடும்பத்தினரும் விருந்தினர்களும் மட்டுமே அனுமதிக்கப் பட்டனர். பின்னர் மஹாராஜா சாமராஜ உடையார் இங்கு பொது மக்களும் நுழைவதற்கான அனுமதியை வழங்கினார். 1909ம் ஆண்டு இது ஸ்ரீ சாமராஜேந்திர விலங்கியல் பூங்கா என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
இந்த மைசூர் வன விலங்கு காட்சியகத்தில் அழிந்து வரும் பல அரிய வகை விலங்குகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதற்காக திட்டமிட்ட இனப்பெருக்க முறைகள் மற்ற பராமரிப்பு திட்டங்களுடன் சேர்த்து செயல்படுத்தப் படுகின்றன.
யானைக்குட்டிகள், மனிதக்குரங்கு குட்டிகள், காட்டெருமை, சிறுத்தை, மற்றும் புலிக்குட்டிகள் போன்றவற்றை இங்கு காணலாம். இங்கு பலவகை விலங்குகள் இனவிருத்தியும் செய்யப்படுகின்றன.
பார்பெரி மலை ஆடு, வரிக்குதிரை, ஒட்டகச்சிவிங்கி, ஈமு, சிம்பன்ஸி, நீர் யானை, கங்காரு, புலி போன்றவை இனவிருத்தி செய்யப்படும் விலங்குகளில் சில.
அது தவிர பல அரிய வகை விலங்குகளான எலி மான், நான்கு கொம்பு காட்டுமான், கேரக்கேல் எனும் அதிசய காட்டு பூனை, சிவட் எனும் உடும்பு வகை, நீலகிரி லாங்குர் எனப்படும் கருங்குரங்கு , சிங்காரா எனும் அரிய வகை கலைமான், பின்டுராங் என்று அழைக்கப்படும் அதிசய பூனைக்கரடி, சிறுத்தை போன்றவை இந்த வன விலங்கு காட்சியகத்தில் பராமரிக்கப்படுகின்றன.

No comments:

Post a Comment

தங்கள் மேலான கருத்துக்களை இங்கே பதிவிடவும்