Friday, April 25, 2014

பிறப்புச் சான்றிதழ் பெறுவது எப்படி?


ஒரு குழந்தையின் பிறப்பைப் பதிவு செய்யும் முக்கிய ஆவணம் பிறப்புச் சான்றிதழ். முன்பெல்லாம் குழந்தை பிறத்தல் என்பது வழக்கமாக வீடுகளிலே நிகழும் ஒரு நிகழ்வு என்பதால் உள்ளூர் மணியக்காரர், தண்டல்காரர்(கிராம உதவியாளர்கள்) போன்றவர்களே பிறப்பை பதிவு செய்யும் வேலையை பார்த்துக்கொள்வர். ஆனால் தற்போது வீட்டிலே குழந்தை பிறந்தால் கூட அப்பிறப்பைப் பதிவு செய்வது பெற்றோரின் முக்கியமான கடமை. இந்திய அரசு, குடிமக்களுக்கு வழங்கும் பாஸ்போர்ட், ஓட்டுனர் உரிமம் முதலான
அநேக வசதிகளைப் பெற பிறப்பு சான்றிதழ் அத்தியாவசியமான ஒரு ஆவணம்.

அதுபோன்று, சொத்து வாரிசுரிமை, திருமணம் செய்ய தகுதியடைந்ததைச் சட்டரீதியாக நிரூபிக்க, பாடசாலை முதல் அரசு உத்தியோகம் வரையான சேர்க்கைகளுக்கு என பல்வேறு விஷயங்களுக்குப் பிறந்த தேதியினை அரசில் ஆவணப்படுத்தியிருப்பது கட்டாயம். குழந்தை பிறந்த 21 தினங்களுக்குள் சம்பந்தப்பட்ட ஏரியாவிலுள்ள பதிவு அதிகாரியிடம் பிறப்பினைப் பதிவு செய்ய வேண்டும். குழந்தை பிறந்த மருத்துவமனைகளிலிருந்து பெறப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், உரிய பரிசீலனைக்குப் பின்னர் பிறப்புச் சான்றிதழ் வழங்கப்படும்.

ஒருவேளை குறிப்பிட்ட 21 நாட்களுக்குள் பதிவுத்துறையில் பிறப்பு பதிவுசெய்யப்படவில்லை என்றாலோ அல்லது வீடுகளில் பிறப்பு நடந்திருந்தாலோ, ஏரியா காவல்துறை மூலம் பிறப்பு உறுதிசெய்யப்பட்ட பின்னர் பதிவுத்துறை அதிகாரிகளால் பிறப்புச் சான்றிதழ் வழங்கப்படுகிறது.

பிறப்புச் சான்றிதழில் பெயர் உள்ளிட்ட தகவல்களைப் பதிவு செய்யும் பொழுது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். குழந்தையின் தாய் தந்தையர் பெயர் அல்லது முகவரியில் ஏதேனும் தவறு இருந்தால், அதைச் சரியான சான்றுகள் அளித்து மாற்றிக்கொள்ளலாம். அதே வேளையில் குழந்தையின் பெயரில் ஏதேனும் மாற்றம் தேவையென்றால் அப்படி மாற்ற முடியாது. எனவே, குழந்தையின் பெயரை உறுதி செய்த பின்னரே அதைப் பிறப்புச் சான்றிதழில் பதிவு செய்யவேண்டும். ஒரு வேளை பிறப்புச் சான்றிதழ் பெறும் சமயம் குழந்தைக்குப்பெயர் வைக்கவில்லையென்றால் பெயர் வைத்த உடனே அதை முறையாக மாநகராட்சிக்கு தெரியப்படுத்தி பதிவு செய்து கொள்ளவேண்டும்.

ஒருமுறை பதிவு செய்துவிட்டால், அதை மாற்றுவது அவ்வளவு ஒன்றும் எளிதானது அல்ல. பெற்றோர் சரியான தகவல்களை அளித்திருந்தும், பதிவு செய்யும் அலுவலர் ஏதேனும் தவறு செய்திருந்தால் மட்டும், பதிவு செய்கையில் பெற்றோர் அளித்த விண்ணப்பத்தில் உள்ள தகவல்களைப் பரிசோதித்துவிட்டு அதை மாற்றித் தருவர். பிறப்புச் சான்றிதழில் இருக்க வேண்டிய விவரங்கள்; பெயர் பிறந்த தேதி, பிறந்த இடம், தாய் மற்றும் தந்தை பெயர், பதிவு செய்த தேதி,பிறப்புப்பதிவு எண்.

No comments:

Post a Comment

தங்கள் மேலான கருத்துக்களை இங்கே பதிவிடவும்